Friday, August 19, 2011

Noolukkor Malai

மாலை நேரத்தில் ஒரு நூல்
மாலையிடத்தக்க ஒரு நூல்


'நூலுக்கோர் மாலை'
'Garland to a Book'


சமூக உணர்வுடைய மனிதன் உருவாக வாசிப்பு உதவுகின்றது. நல்ல நூல்களி;ன் பரிச்சயம் காலப்போக்கில் சமுதாயத்தில் அறிவின் பெருக்கத்தை ஏற்படுத்தியே தீரும் என்ற நம்பிக்கையுடன் நூலக விழிப்புணர்வு நிறுவகம் அறிமுகப்படுத்தும் பல  செயற்திட்டங்களில் ஒன்று தான் 'நூலுக்கு ஒரு மாலை'  நிகழ்வு ஆகும்;. நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் உப குழுவான வாசிப்பு மேம்பாட்டுக் குழு  பொது நூலகங்கள், பாடசாலைகள், ஏனைய பொது நல அமைப்புகள் போன்றவற்றினூடாக இந்நிகழ்வை முன்னெடுக்கிறது.
 கல்விச் சமூகம், பெற்றோர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் கொண்டதாக, ஒரு மாலைப் பொழுதில் ஒரு 'நல்ல' நூலை, அதனைப் படித்துச் சுவைத்த ஒரு 'நல்ல' வாசிப்பு உணர்வுடைய ஒருவரைக் கொண்டு, அவரின் ரசனை அனுபவத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கி, அதனூடாக ஏனையவர்களையும் அந்நூலைத் தேடி வாசிக்கத் தூண்டும் விதமாகக் கூறவைக்கும் நிகழ்வாக
'நூலுக்கு ஒரு மாலை'
நிகழ்வு அமைகின்றது. இங்கு
'மாலை நேரத்தில் ஒரு நூல்'
 என்ற கருத்துத் தொனிக்கும் அதே சமயம், மாலையிட்டு மரியாதை செய்யவல்ல கருத்தக்களை மக்கள் மனத்தில் இழையவிடக்கூடிய
'மதிப்புமிக்க நூல்'
என்ற தொனிப்பொருளும்  உடனமைவதைக் குறிப்பிடலாம்.


.....................................................................................................

நுழைவாயில்
ஆய்வுக்கட்டுரைகள், அன்றாடச் செய்தி இதழ்கள், சுவரொட்டிகள், பொது அறிவுப்போட்டிகள், மேடைச் சொற்பொழிவுகள் என்று கல்விசார் நடவடிக்கைகள் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துபவை புகழ் பெற்ற தத்துவ மேதை பிரான்ஸிஸ் பேக்கனுக்குரிய 'அறிவே ஆற்றல்' 'வாசிப்பு மனிதனை முழுமையாக்கும்' என்ற இரண்டு புகழ் பெற்ற வாசகங்களுமாகும். இந்த வாசகங்கள் கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவை என்பதும் மனித சமூகத்தை நீண்டகாலம் ஆக்கிரமித்திருந்ததும் விவசாயத்தை முதன்மையாகவும் நிலத்தை மூலவளமாகவும்  கொண்டதுமான நிலபிரபுத்துவ சமூக அமைப்பு நிலைகொண்டிருந்த ஒரு காலப்பகுதியில் தான் தோற்றம் பெற்றவை என்பதும் ஆச்சரியத்துக்குரியதொன்று.
அறிவே ஆற்றல்
ஆளுமை மிக்க மனித சமூகத்தின் பலம் இயற்கை வளத்தாலோ, பணபலத்தாலோ அளவிடப்படுவதில்லை. அது அறிவினால் அளவிடப்படுகிறது. உலகின் வளர்ச்சியுற்ற சமூகங்கள் அனைத்தும் அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே வளர்ச்சி என்ற கட்டிடத்தை எழுப்பியுள்ளன. அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பு.
கண்டவை, கேட்டவை, படித்தவை, உணர்ந்தவை எனப் புலன்களால் பெற்ற அறிவை புலனுக்குப் புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணைகொண்டு அலசி ஆராய்ந்து, ஒப்புநோக்கி, உண்மை கண்டு, புதிய கருத்துக்களை உருவாக்கி, அவற்றை மேலும் ஆய்வுசெய்து, சரிபார்த்து, கோட்பாடு கண்டு, சட்டமாக்கி, உலகை வழிநடத்தும் ஆற்றலைப் பெறுவதற்கு அறிவு சார் சிந்தனை அவசியமாகும். அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்குப் பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து தன்னை விடுவிப்பதற்கு உதவுகின்ற தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்தப் பரந்து பட்ட வாசிப்புத் திறனே. வாசிப்பதன் மூலமோ, கேள்வி ஞானத்தினாலோ நாம் பெறும் தகவலைத் தகவலாகவே வைத்திருக்காது, அறிந்து கொண்டவற்றை ஆய்வுக்குட்படுத்தி ஆராய்ந்து செல்லும் போதுதான் 'அறிவு' எமக்குள் ஊறும். இதையே 'கற்றனைத்து ஊறும் அறிவு' , 'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' ஆகிய  குறள்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. கல்லுதல் என்ற பொருள் கொண்ட கல்வி என்பதும் இதையே உணர்த்தி நிற்கிறது.

இன்றைய தேவை
நாளும் பெருகிவரும் நூல்களின் எண்ணிக்கை, அறிவுச் சாதனங்களின் எண்ணிக்கை, தொழில்நுட்ப வசதிகள் என அமைந்தபோதிலும் அண்மைக்கால சமுதாயத்தில் வாசிப்புப்பழக்கம் குறைவடைந்து வருவதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
போட்டி மிக்க தொழில் சந்தையில் நின்றுபிடிப்பதற்கேற்ற வகையில் தான் எமது நகர்வுகள் இருப்பதன் காரணமாக வாழ்க்கைப் படிப்பிற்கான கால அவகாசமோ சிந்தனையோ எம்மிடம் அருகி வருவதே கண்கூடு. தொழில் சந்தையில் போட்டி போடக்கூடிய வல்லமையைத் தரும் பாடசாலைகளை நோக்கி தமது பிள்ளைகளை நகர்த்தும் பெற்றோர்கள,; பாடசாலைகளைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தரப்படுத்தும் கல்வித் திட்டங்கள், அந்தஸ்து மிக்க வாழ்க்கைக்குரிய மூலதனமாகக் கல்வியை கருதும் எமது சமூகத்தின் மனப்பாங்கு என்பன மாறும் வரை பாடசாலைகள் அறிவுக்கான அடித்தளங்களாக இருக்கும் வாய்ப்பு சாத்தியமற்றதொன்றாகும். பரந்துபட்ட வாசிப்பால் மட்டுமே அறிவுக்கான அடித்தளம் போடப்பட முடியும் என்பது உண்மையானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள் என்ற முக்கூட்டுச் சக்திகளின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினூடாகவே இது அடையப்படமுடியும்.


எங்கள் நோக்கம்

 சமூகத்தில் அருகி வரும் வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்ய உதவுதல்.

 வியாபார நோக்குடன் உற்பத்தி செய்து குவிக்கப்படுகின்ற தரமற்ற நூல்களுக்குள், தரமான நூல்களை வாசகன் இனங்கண்டு கொள்ள உதவுதல்.

 சுயமாகத் தேடி வாசிக்கும் இயல்புடையோரை இனங்காணவும் வாசிப்பினூடாக மானுடத்தின் வளமான மேம்பாட்டை விரும்புவோரை ஒன்றிணைக்கவும் உதவுதல்.
 அறிமுகவுரையினூடாக புதிய பார்வையை வாசகர் பெறுவதன் மூலம் குறிப்பட்ட நூலை அவர்கள் நூலகங்களில் தேடிப் பெற்றோ, சொந்தமாக வாங்கியோ வாசிக்கத் தூண்டுதல்.


உங்கள் ஒத்துழைப்பு

 பொது நூலகங்கள், பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், கிராம மட்டச் செயற்குழுக்கள், ஆன்மீக நிலையங்கள், சமூக சேவை அமைப்புகள் போன்ற எந்தவொரு அமைப்பும் இந்நிகழ்வைச் சிறப்புற நடாத்துவதற்குப் பொருத்தமானது.

 பொது நூலகங்களாயின் மாதம் இரு தடவையாவது மாலை நேரமொன்றை இதற்கு ஒதுக்கலாம். வாசகர் வட்டங்களை இந்நிகழ்வுக்கு ஏற்ற சிறந்த மூலங்களாகக் கொள்ளலாம்.
 பாடசாலைகளில் இந்நிகழ்வை மேற்கொள்ளத் திட்டமிடின் மாதம் இருதடவை  காலைப் பிரார்த்தனையின் பின்னர் அரை மணி நேரமாவது இதற்கு ஒதுக்கி, படித்துச் சுவைத்த நூலை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

 பொது அமைப்புகளாயின் மாதத்தில் ஒரு தினத்தை இதற்கென ஒதுக்கி கூடியது இரு மணி நேரங்கள் நூலுக்குள் நுழைந்து இன்புற வழிசெய்யலாம்.

தகுந்த வளங்கள்

 'நான்' என்ற உணர்வை இல்லாதொழித்து 'நாம்' என்ற உணர்வைத் தோற்றுவிக்கும் எந்தவொரு நூலும் நூலுக்கொரு மாலை நிகழ்வை அலங்கரிப்பதற்குச் சிறந்ததாகக் கருதப்படும்.

 தேர்ந்தெடுக்கப்படும் நூலானது மொழி சார்ந்தோ, பொருட்துறை சார்ந்தோ, நாடு சார்ந்தோ வரையறைக்குட்படுத்தப்பட்டதல்ல.  கதை, கட்டுரை, கவிதை, நாடகம், சுயசரிதை, வரலாறு, ஆன்மீகம், தத்துவம், மொழி, அறிவியல், கலை எனப் எவ்வகை இலக்கியமும் பொருத்தமானது.
 சமூகங்களை வடிவமைத்த சிற்பிகள், சமூகத்தை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் சென்ற வழிகாட்டிகள், சமூகத்தில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்திய  அவதார புருஷர்கள் போன்ற  பெரும் தலைவர்களின் வாழ்க்கைச் சரிதங்கள், நாம் வாழுகின்ற சமூகத்துக்குப் பொருத்தமான புதுப்புது ஆய்வு முயற்சிகளைத் தூண்டும் நூல்கள், பொது அறிவு நூல்கள் போன்றவை  முன்னேறுவதற்கு மாதிரிகள் தேடி அலையும் மாணவப் பருவத்துக்கு மிகப் பொருத்தமானவை.

 எனக்கு இப்படி வாய்க்கவில்லையே என்ற ஏக்கத்தைத் தருவதற்குப் பதில் மற்றவரை விட நான் மேல் என்ற மனோநிலையைத் தருகின்ற நூல்கள், விரக்தியால் விழுந்து கிடப்பவரைத் தூக்கி நிறுத்தித் துணிவு தந்திடும் நூல்கள், பற்றிப் பிடித்து ஏறுவதற்கு கொழுகொம்பாக இருக்கும் நூல்கள் வாழ வழி தேடி அலையும் வளர்ந்தோர் சமூகத்துக்குப் பொருத்தமானவை

 எமது சமூகத்தின் வாழ்நிலையைப் பிரதிபலிக்கும் கலை, இலக்கியங்கள், உலக சமூகங்களின் வாழ்நிலையைக் காட்டும்  மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், ஆன்மீக சிந்தனையைத் தரக்கூடிய சமய தத்துவ நூல்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பொருத்தமானவை.

 
சிறந்த வழிகாட்டிகள்
 வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வயது, அறிவு அந்தஸ்து போன்ற எவையும் தடையாக இருக்க முடியாது.

 சிறந்த தொடர்பாடல் திறன்களும் மொழித்திறனும் கொண்ட எவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியும்.

 அறிமுகத்துக்குத் தெரிவு செய்யப்படும் ஒரு நூலை அதன் ஆசிரியரே அறிமுகம் செய்வது தவிர்க்கப்படல் நன்று.

 அறிமுகப்படுத்துபவர் தாம் ரசித்த, சுவைத்த, அம்சங்களை தனது மொழியில் எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவராக இருத்தல் விரும்பத்தக்கது.

 வாசகனுக்குச் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் நகைச்சுவை இழையோடக் கூடிய பேச்சாற்றல் நூலுக்குள் உலவும் வல்லமையைத் தரக்கூடியது.

நுழையும் வழி

 அறிமுகப்படுத்தப்படும் நூலானது பரந்த வாசக சமூகத்தக்குப் போய்ச் சேரக்கூடிய வகையில் அதன் அறிமுக உரை சுவையும் ரசனையும் உடையதாக இருத்தல் அவசியமானது.

 நூலின் தலைப்பு, அதன் பொருத்தப்பாடு, அது வெளிப்படுத்தும் உணர்வுகள், நூலின் உள்ளடக்கமும் அதன் சாராம்சமும் அறிமுக உரையில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

 நூலில் காணப்படும் எண்ணங்கள், மானுட மேம்பாட்டுச் சிந்தனைகள், அவற்றின் முக்கியத்துவம், நூலை வாசித்தபோது ஏற்படும் அழகியல் உணர்வுகள், அவை வெளிப்படுத்தும் பாங்குகள், மனித குல உயர்வுக்கு இந்நூல் ஆற்றுகின்ற பங்களிப்பு போன்றவை அறிமுகம் செய்பவரால் இனங்காணப்பட வேண்டும்.

 ஆசிரியரின் சிந்தனைகளால் வாசகனும் சமூகமும் அடையக் கூடிய நன்மைகள் சுட்டிக் காட்டப்படல் அவசியம்.

 சமூக வாழ்க்கைத் தரங்கள் உணர்வுகள், பண்பாடு போன்றவற்றுக்கு நூல் எவ்வளவு உதவுகின்றது என்பது விளக்கப்படல் வேண்டும்.



No comments: