Friday, August 19, 2011

School exhibitions



















Noolukkor Malai

மாலை நேரத்தில் ஒரு நூல்
மாலையிடத்தக்க ஒரு நூல்


'நூலுக்கோர் மாலை'
'Garland to a Book'


சமூக உணர்வுடைய மனிதன் உருவாக வாசிப்பு உதவுகின்றது. நல்ல நூல்களி;ன் பரிச்சயம் காலப்போக்கில் சமுதாயத்தில் அறிவின் பெருக்கத்தை ஏற்படுத்தியே தீரும் என்ற நம்பிக்கையுடன் நூலக விழிப்புணர்வு நிறுவகம் அறிமுகப்படுத்தும் பல  செயற்திட்டங்களில் ஒன்று தான் 'நூலுக்கு ஒரு மாலை'  நிகழ்வு ஆகும்;. நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் உப குழுவான வாசிப்பு மேம்பாட்டுக் குழு  பொது நூலகங்கள், பாடசாலைகள், ஏனைய பொது நல அமைப்புகள் போன்றவற்றினூடாக இந்நிகழ்வை முன்னெடுக்கிறது.
 கல்விச் சமூகம், பெற்றோர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரையும் கொண்டதாக, ஒரு மாலைப் பொழுதில் ஒரு 'நல்ல' நூலை, அதனைப் படித்துச் சுவைத்த ஒரு 'நல்ல' வாசிப்பு உணர்வுடைய ஒருவரைக் கொண்டு, அவரின் ரசனை அனுபவத்தை வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கி, அதனூடாக ஏனையவர்களையும் அந்நூலைத் தேடி வாசிக்கத் தூண்டும் விதமாகக் கூறவைக்கும் நிகழ்வாக
'நூலுக்கு ஒரு மாலை'
நிகழ்வு அமைகின்றது. இங்கு
'மாலை நேரத்தில் ஒரு நூல்'
 என்ற கருத்துத் தொனிக்கும் அதே சமயம், மாலையிட்டு மரியாதை செய்யவல்ல கருத்தக்களை மக்கள் மனத்தில் இழையவிடக்கூடிய
'மதிப்புமிக்க நூல்'
என்ற தொனிப்பொருளும்  உடனமைவதைக் குறிப்பிடலாம்.


.....................................................................................................

நுழைவாயில்
ஆய்வுக்கட்டுரைகள், அன்றாடச் செய்தி இதழ்கள், சுவரொட்டிகள், பொது அறிவுப்போட்டிகள், மேடைச் சொற்பொழிவுகள் என்று கல்விசார் நடவடிக்கைகள் அனைத்திலும் ஆதிக்கம் செலுத்துபவை புகழ் பெற்ற தத்துவ மேதை பிரான்ஸிஸ் பேக்கனுக்குரிய 'அறிவே ஆற்றல்' 'வாசிப்பு மனிதனை முழுமையாக்கும்' என்ற இரண்டு புகழ் பெற்ற வாசகங்களுமாகும். இந்த வாசகங்கள் கிட்டத்தட்ட ஐந்து நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவை என்பதும் மனித சமூகத்தை நீண்டகாலம் ஆக்கிரமித்திருந்ததும் விவசாயத்தை முதன்மையாகவும் நிலத்தை மூலவளமாகவும்  கொண்டதுமான நிலபிரபுத்துவ சமூக அமைப்பு நிலைகொண்டிருந்த ஒரு காலப்பகுதியில் தான் தோற்றம் பெற்றவை என்பதும் ஆச்சரியத்துக்குரியதொன்று.
அறிவே ஆற்றல்
ஆளுமை மிக்க மனித சமூகத்தின் பலம் இயற்கை வளத்தாலோ, பணபலத்தாலோ அளவிடப்படுவதில்லை. அது அறிவினால் அளவிடப்படுகிறது. உலகின் வளர்ச்சியுற்ற சமூகங்கள் அனைத்தும் அறிவு என்ற அத்திவாரத்தின் மீதே வளர்ச்சி என்ற கட்டிடத்தை எழுப்பியுள்ளன. அறிவுக்கு அடிப்படையாக இருப்பது வாசிப்பு.
கண்டவை, கேட்டவை, படித்தவை, உணர்ந்தவை எனப் புலன்களால் பெற்ற அறிவை புலனுக்குப் புறம்பாக உள்ள பகுத்தறிவின் துணைகொண்டு அலசி ஆராய்ந்து, ஒப்புநோக்கி, உண்மை கண்டு, புதிய கருத்துக்களை உருவாக்கி, அவற்றை மேலும் ஆய்வுசெய்து, சரிபார்த்து, கோட்பாடு கண்டு, சட்டமாக்கி, உலகை வழிநடத்தும் ஆற்றலைப் பெறுவதற்கு அறிவு சார் சிந்தனை அவசியமாகும். அறிவு சார் சிந்தனையை உருவாக்குவதற்குப் பரந்த வாசிப்புத் திறன் முக்கியம். தான் எதிர் கொள்ளும் பிரச்சினைகளிலிருந்து தன்னை விடுவிப்பதற்கு உதவுகின்ற தனித்துவமான, தனக்குத் தானே நீதிபதியாகக் கூடிய வல்லமையை அளிப்பது இந்தப் பரந்து பட்ட வாசிப்புத் திறனே. வாசிப்பதன் மூலமோ, கேள்வி ஞானத்தினாலோ நாம் பெறும் தகவலைத் தகவலாகவே வைத்திருக்காது, அறிந்து கொண்டவற்றை ஆய்வுக்குட்படுத்தி ஆராய்ந்து செல்லும் போதுதான் 'அறிவு' எமக்குள் ஊறும். இதையே 'கற்றனைத்து ஊறும் அறிவு' , 'எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு' ஆகிய  குறள்கள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன. கல்லுதல் என்ற பொருள் கொண்ட கல்வி என்பதும் இதையே உணர்த்தி நிற்கிறது.

இன்றைய தேவை
நாளும் பெருகிவரும் நூல்களின் எண்ணிக்கை, அறிவுச் சாதனங்களின் எண்ணிக்கை, தொழில்நுட்ப வசதிகள் என அமைந்தபோதிலும் அண்மைக்கால சமுதாயத்தில் வாசிப்புப்பழக்கம் குறைவடைந்து வருவதாகவே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
போட்டி மிக்க தொழில் சந்தையில் நின்றுபிடிப்பதற்கேற்ற வகையில் தான் எமது நகர்வுகள் இருப்பதன் காரணமாக வாழ்க்கைப் படிப்பிற்கான கால அவகாசமோ சிந்தனையோ எம்மிடம் அருகி வருவதே கண்கூடு. தொழில் சந்தையில் போட்டி போடக்கூடிய வல்லமையைத் தரும் பாடசாலைகளை நோக்கி தமது பிள்ளைகளை நகர்த்தும் பெற்றோர்கள,; பாடசாலைகளைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தரப்படுத்தும் கல்வித் திட்டங்கள், அந்தஸ்து மிக்க வாழ்க்கைக்குரிய மூலதனமாகக் கல்வியை கருதும் எமது சமூகத்தின் மனப்பாங்கு என்பன மாறும் வரை பாடசாலைகள் அறிவுக்கான அடித்தளங்களாக இருக்கும் வாய்ப்பு சாத்தியமற்றதொன்றாகும். பரந்துபட்ட வாசிப்பால் மட்டுமே அறிவுக்கான அடித்தளம் போடப்பட முடியும் என்பது உண்மையானால் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள் என்ற முக்கூட்டுச் சக்திகளின் ஒருங்கிணைந்த செயற்பாட்டினூடாகவே இது அடையப்படமுடியும்.


எங்கள் நோக்கம்

 சமூகத்தில் அருகி வரும் வாசிப்புப் பழக்கத்தை விருத்தி செய்ய உதவுதல்.

 வியாபார நோக்குடன் உற்பத்தி செய்து குவிக்கப்படுகின்ற தரமற்ற நூல்களுக்குள், தரமான நூல்களை வாசகன் இனங்கண்டு கொள்ள உதவுதல்.

 சுயமாகத் தேடி வாசிக்கும் இயல்புடையோரை இனங்காணவும் வாசிப்பினூடாக மானுடத்தின் வளமான மேம்பாட்டை விரும்புவோரை ஒன்றிணைக்கவும் உதவுதல்.
 அறிமுகவுரையினூடாக புதிய பார்வையை வாசகர் பெறுவதன் மூலம் குறிப்பட்ட நூலை அவர்கள் நூலகங்களில் தேடிப் பெற்றோ, சொந்தமாக வாங்கியோ வாசிக்கத் தூண்டுதல்.


உங்கள் ஒத்துழைப்பு

 பொது நூலகங்கள், பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், கிராம மட்டச் செயற்குழுக்கள், ஆன்மீக நிலையங்கள், சமூக சேவை அமைப்புகள் போன்ற எந்தவொரு அமைப்பும் இந்நிகழ்வைச் சிறப்புற நடாத்துவதற்குப் பொருத்தமானது.

 பொது நூலகங்களாயின் மாதம் இரு தடவையாவது மாலை நேரமொன்றை இதற்கு ஒதுக்கலாம். வாசகர் வட்டங்களை இந்நிகழ்வுக்கு ஏற்ற சிறந்த மூலங்களாகக் கொள்ளலாம்.
 பாடசாலைகளில் இந்நிகழ்வை மேற்கொள்ளத் திட்டமிடின் மாதம் இருதடவை  காலைப் பிரார்த்தனையின் பின்னர் அரை மணி நேரமாவது இதற்கு ஒதுக்கி, படித்துச் சுவைத்த நூலை மற்றவருடன் பகிர்ந்து கொள்ளலாம்.

 பொது அமைப்புகளாயின் மாதத்தில் ஒரு தினத்தை இதற்கென ஒதுக்கி கூடியது இரு மணி நேரங்கள் நூலுக்குள் நுழைந்து இன்புற வழிசெய்யலாம்.

தகுந்த வளங்கள்

 'நான்' என்ற உணர்வை இல்லாதொழித்து 'நாம்' என்ற உணர்வைத் தோற்றுவிக்கும் எந்தவொரு நூலும் நூலுக்கொரு மாலை நிகழ்வை அலங்கரிப்பதற்குச் சிறந்ததாகக் கருதப்படும்.

 தேர்ந்தெடுக்கப்படும் நூலானது மொழி சார்ந்தோ, பொருட்துறை சார்ந்தோ, நாடு சார்ந்தோ வரையறைக்குட்படுத்தப்பட்டதல்ல.  கதை, கட்டுரை, கவிதை, நாடகம், சுயசரிதை, வரலாறு, ஆன்மீகம், தத்துவம், மொழி, அறிவியல், கலை எனப் எவ்வகை இலக்கியமும் பொருத்தமானது.
 சமூகங்களை வடிவமைத்த சிற்பிகள், சமூகத்தை முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் சென்ற வழிகாட்டிகள், சமூகத்தில் எதிர்பாராத மாற்றங்களை ஏற்படுத்திய  அவதார புருஷர்கள் போன்ற  பெரும் தலைவர்களின் வாழ்க்கைச் சரிதங்கள், நாம் வாழுகின்ற சமூகத்துக்குப் பொருத்தமான புதுப்புது ஆய்வு முயற்சிகளைத் தூண்டும் நூல்கள், பொது அறிவு நூல்கள் போன்றவை  முன்னேறுவதற்கு மாதிரிகள் தேடி அலையும் மாணவப் பருவத்துக்கு மிகப் பொருத்தமானவை.

 எனக்கு இப்படி வாய்க்கவில்லையே என்ற ஏக்கத்தைத் தருவதற்குப் பதில் மற்றவரை விட நான் மேல் என்ற மனோநிலையைத் தருகின்ற நூல்கள், விரக்தியால் விழுந்து கிடப்பவரைத் தூக்கி நிறுத்தித் துணிவு தந்திடும் நூல்கள், பற்றிப் பிடித்து ஏறுவதற்கு கொழுகொம்பாக இருக்கும் நூல்கள் வாழ வழி தேடி அலையும் வளர்ந்தோர் சமூகத்துக்குப் பொருத்தமானவை

 எமது சமூகத்தின் வாழ்நிலையைப் பிரதிபலிக்கும் கலை, இலக்கியங்கள், உலக சமூகங்களின் வாழ்நிலையைக் காட்டும்  மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், ஆன்மீக சிந்தனையைத் தரக்கூடிய சமய தத்துவ நூல்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் பொருத்தமானவை.

 
சிறந்த வழிகாட்டிகள்
 வாசிப்பு அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு வயது, அறிவு அந்தஸ்து போன்ற எவையும் தடையாக இருக்க முடியாது.

 சிறந்த தொடர்பாடல் திறன்களும் மொழித்திறனும் கொண்ட எவரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ள முடியும்.

 அறிமுகத்துக்குத் தெரிவு செய்யப்படும் ஒரு நூலை அதன் ஆசிரியரே அறிமுகம் செய்வது தவிர்க்கப்படல் நன்று.

 அறிமுகப்படுத்துபவர் தாம் ரசித்த, சுவைத்த, அம்சங்களை தனது மொழியில் எடுத்துரைக்கும் ஆற்றல் பெற்றவராக இருத்தல் விரும்பத்தக்கது.

 வாசகனுக்குச் சலிப்பை ஏற்படுத்தாத வகையில் நகைச்சுவை இழையோடக் கூடிய பேச்சாற்றல் நூலுக்குள் உலவும் வல்லமையைத் தரக்கூடியது.

நுழையும் வழி

 அறிமுகப்படுத்தப்படும் நூலானது பரந்த வாசக சமூகத்தக்குப் போய்ச் சேரக்கூடிய வகையில் அதன் அறிமுக உரை சுவையும் ரசனையும் உடையதாக இருத்தல் அவசியமானது.

 நூலின் தலைப்பு, அதன் பொருத்தப்பாடு, அது வெளிப்படுத்தும் உணர்வுகள், நூலின் உள்ளடக்கமும் அதன் சாராம்சமும் அறிமுக உரையில் உள்ளடக்கப்படல் வேண்டும்.

 நூலில் காணப்படும் எண்ணங்கள், மானுட மேம்பாட்டுச் சிந்தனைகள், அவற்றின் முக்கியத்துவம், நூலை வாசித்தபோது ஏற்படும் அழகியல் உணர்வுகள், அவை வெளிப்படுத்தும் பாங்குகள், மனித குல உயர்வுக்கு இந்நூல் ஆற்றுகின்ற பங்களிப்பு போன்றவை அறிமுகம் செய்பவரால் இனங்காணப்பட வேண்டும்.

 ஆசிரியரின் சிந்தனைகளால் வாசகனும் சமூகமும் அடையக் கூடிய நன்மைகள் சுட்டிக் காட்டப்படல் அவசியம்.

 சமூக வாழ்க்கைத் தரங்கள் உணர்வுகள், பண்பாடு போன்றவற்றுக்கு நூல் எவ்வளவு உதவுகின்றது என்பது விளக்கப்படல் வேண்டும்.



Thursday, August 18, 2011

World of Knowledge


முப்பரிமாண நூலகம்
சான்றாதாரக் கல்வியின் முதன்மை மூலகம்
Three Dimensional Library
Essential element for evidence based education
சுருக்கம்(தற்போது நிலைகொண்டிருக்கும் நூலக முறைமைகளினூடாக சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் யாழ் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வெளிப்பாடாக கருக்கொண்ட புதிய கருத்துநிலையே முப்பரிமாண நூலகமாகும். நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் கருவில் உதித்த இந்தப் புதிய கருத்துநிலையானது 'சிந்தனைப் பதிவேடுகள் அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் நடமாடும் நூலகக் கண்காட்சியாக சுமார் 30க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் ஒழுங்குபடுத்தப்பட்டதுடன் 2009 ஒக்டோபர் வாசிப்பு மாதத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இக்கட்டுரையானது இச்செயற்திட்டத்தினை தென்னிலங்கையில் அறிமுகப்படுத்தும் புதிய புலங்களை இனங்காணும் நோக்கில் ஒவ்வொரு அம்சங்களையும் விளக்கி நிற்கிறது.)
அறிமுகம்அறிவு மூலவளமாகி, அனைத்து மூல வளங்களையும் இயக்கும் உந்துசக்தியாகத் தொழிற்படும் இன்றைய தகவல் தொழினுட்ப யுகத்தில், மனித சமூகமானது,  தனது தேடல்களைப் பல முனைகளிலிருந்தும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. சமூக முன்னேற்றம் என்பது அவ்வச்சூழலில் அமைந்துள்ள  தேடலுக்கான வாய்ப்புகளையும் வசதிகளையும்; பயன்படுத்தும் நிலையிலேயே சாத்தியப்படும். இத்தகைய பயன்பாடு என்பது சுயசிந்தனையின்பாற்பட்டது. சுய சிந்தனைக்குக் களமாக இருப்பது பரந்துபட்ட வாசிப்பே ஆகும்.
வாசிப்பால் தன்னை நீண்ட காலம் வளப்படுத்தி கல்வியில் உயர்ந்த சமூகம் என்ற பெருமையை உலகளாவியரீதியில் பெற்ற நமது தமிழ்ச் சமூகத்தின் இன்றைய வாசிப்பு நிலை கேள்விக்குறியாகி நிற்கிறது. குறைந்தது கடந்த இரு தசாப்தங்களாவது மனித மனங்கள் ஒவ்வொன்றிலும் தேடலுக்கான பாதைகள் அனைத்தும் மூடப்பட்ட பரிதாபகர நிலையானது கல்விச் சமூகத்தின் பார்வைக்கு எட்டியதோ இல்லையோ நூலக சமூகத்தின் கண்களுக்கு மிகத் தெளிவாகவே தெரியும் காலப்பகுதி இது. அதிலும் தகவல் தொழினுட்பத்தின் நல்ல அம்சங்களைத் தேடிக் கண்டுபிடித்து கருத்துக்கு இனிமை தரும் அம்சங்களைப் பயன்படுத்தும் ஆற்றலைக் கைவிட்டு கண்ணுக்கு இனிமை தரும் கவர்ச்சிகளை மட்டும் தேடியலையும் நிலையும், வலைத் தளம் இருக்க வாசிப்பு ஏன் என்ற வாதங்களும், வாசிப்புப் பழக்கத்தை இல்லாமலாக்குவதில்  30 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு கணிசமான பங்குண்டு என்ற நொண்டிச் சாக்குகளும், தகவல் தேடலுக்கான அனைத்து தேவைகளையும் இல்லாமலாக்குவதில் ஒருபடி கூடவே ஒத்துழைக்கும் இன்றைய நிலையில் தமிழ்ச் சமூகத்தை வாசிப்பை நோக்கி மீண்டும் திசைதிருப்பும் பாரிய கடமையைக் கொண்டனவாகவே நூலகங்களின் பணி உணரப்படுகின்றது.
பாடசாலைகள் தோறும் பாடசாலை நூலகக் கற்றல் வள நிலையம் என்ற புதிய பெயருடன் பாடசாலை நூலகங்களை உருவாக்கும் பணி, இருக்கும் நூலகங்களை புது மெருகூட்டும் முயற்சிகள், கூடுதலானவரை பாடசாலை நூலகத்துக்கு பட்டதாரி ஆசிரியர் ஒருவரை ஆசிரிய நூலகர் என்ற பெயருடன் நியமிக்கும் முயற்சிகள், ஒக்டோபர் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாகப் பிரகடனப்படுத்தி; அந்த நாட்களில் பொதுசன நூலகம் பாடசாலை நூலகம் என்ற பேதமின்றி கருத்தரங்குகள் கண்காட்சிகள் போட்டிப்பரீட்சைகள் என்று நடத்துதல் ஆசிரிய நூலகர்களுக்கு பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்குபடுத்துதல் என வாசிப்பை மேம்படுத்துவதற்கான பலவித முயற்சிகளில் இறங்கியிருக்கிறது இலங்கைச் சமூகம். 5நு மாதிரி போன்று வகுப்பறைக் கற்றல் கற்பித்தலுக்கான புதிய பல அணுகுமுறைகள், வகுப்பறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற வாசிப்பு மூலை, வாசிப்புப் பெட்டி போன்ற புதிய பல செயற்திட்டங்கள்  வாசிப்பின் அவசியத்தை மேலும் வெளிப்படுத்தி பாடசாலை நூலகத்தைத் தரமுள்ள நூலகமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை  வலியுறுத்துகின்றது.
இவை அனைத்தையும் தூக்கிச் சாப்பிடுவது போன்று 'யாம் இருக்கப் பயமேன்' என்று அபயக்கரம் கொடுத்து தனியார் கல்வி நிலையங்கள் தயார்நிலைத் தகவலை அதாவது சமைத்த உணவை மூளைக்குள் செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிலையில் வாசிப்பின் தரம் படுமோசமாகப் பின்தள்ளப்படுவதில் ஆச்சரியத்துக்கு இடமில்லை.
இதன் ஒரு படியாக வாசிப்பைத் தூண்டுவதற்கான நீண்டகாலத் தேடலில் பிறந்த புதிய உத்தியே இந்த முப்பரிமாண நூலகம்.
அறிவின் எல்லையைத் தாண்டிய சுயசிந்தனைக்கும் தேடலுக்கும் ஆதார சுருதியாக அமையக்கூடிய வாசிப்புப் பழக்கத்தை உருவாக்குவதற்கும் விருத்தி செய்வதற்கும் தேவையான அனைத்து வளங்களையும் ஒன்றிணைப்பதனூடாக உயிர்ப்புடைய 'மனித' சமூகத்தைத் தோற்றுவிக்க  ஒன்றிணைதல்; என்பதை  தொலைநோக்காகவும், நூலகங்கள், தகவல் நிறுவனங்கள், ஆவணவாக்க நிலையங்கள் போன்றவற்றைச் சமூகப் பயன்பாட்டுக்கு உதவக்கூடிய அறிவு ஆற்றல், அனுபவம் என்பவற்றை வளர்த்தெடுக்கக்கூடிய தகவல் மையங்களாக மாற்றுவதை நோக்கமாகவும்  கொண்டு உருவாக்கப்பட்ட நூலக விழிப்புணர்வு நிறுவகத்தின் பலதரப்பட்ட செயற்திட்டங்களில் ஒன்றுதான் இந்த முப்பரிமாண நூலகமாகும். வரையறுக்கப்பட்ட ஆளணி, நிதி, வள வசதிகளுடன் அகல திறக்கும் தகவற் சேவைகளின் நுழைவாயில்களை மூடிவிடாமல் முன்னெடுப்பது என்பது சிரமமானதொன்றேயாயினும் சமூக மேம்பாட்டை மாத்திரம் முதன்மைப்படுத்தியே இத்தகைய திட்டங்களை அது முன்னெடுக்கின்றது.
தன்னை வளங்களாலும் சேவைகளாலும் வளர்த்தெடுத்து வரும் அதேசமயம் இத்தகைய ஒரு செயற்திட்டத்தையும் முன்னெடுக்கிறது.
'சிந்தனைப் பதிவேடுகள் அன்றும் இன்றும்' என்ற தலைப்பில் யாழ் மாவட்டத்தில் 30க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் நடமாடும் நூலகக் கண்காட்சியை ஒழுங்குபடுத்தியதன் வாயிலாக சான்றாதாரக் கல்வியின் முக்கியத்துவத்தையும் அதன் பயனையும் தெளிவாகக் கண்டுணர்ந்ததன் விளைவாக முப்பரிமாண நூலகம் என்ற புதிய கருத்துநிலையினூடாக வாசிப்பை மேம்படுத்தும் புதிய உத்தியை அறிமுகம் செய்துள்ளது.
வரைவிலக்கணம்சுயகற்றல் செயற்பாட்டை இலக்கு வைத்து தகவலைத் கண்டறியும் பொருட்டு குறித்த பாடத் துறையில் பொருள் தரும் வகையில் ஒழுங்குபடுத்தப்பட்ட உருக்கள், ஆவணங்கள், தகவல்கள் என்ற மூன்று முக்கிய மூலகங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட புதிய ஒரு கருத்துநிலையே முப்பரிமாண நூலகமாகும்.
தூரநோக்குகள் 1. பிரதேச வரலாற்றினை ஆவணப்படுத்தும் உருநிலை வளங்களின் சேர்க்கை ஒன்றினை கட்டியெழுப்புதலுக்கான அடிப்படை கட்டமைப்பினை உருவாக்குதல்.
2. நூலகங்களை அதிகார பூர்வமான பண்பாட்டுக் காப்பகமாகத் தொழிற்பட வைத்தல்.
3. மாணவர்களிடையே தகவல் வளப்பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வையும் தகவல் அறிவு (ஐடு) விருத்தி நிலையையும் ஏற்படுத்தல்.
இலக்குகள் அல்லது நோக்கங்கள் 4. வாசிப்பினை மாத்திரம் மையப்படுத்தாத வகையில் கண்டும் தொட்டும் உணரத்தக்க சான்றுகளுடன் கூடிய கற்றல் சூழலினை உருவாக்குதல்
5. அறிவின் பதிவகங்களாக தொழிற்படும் நூலகங்களை அனுபவங்களையும் அறிவின் மாதிரிகளையும் வெளிப்படுத்தும் கலையகங்களாக தொழிற்பட வைத்தல்.
6. பாடசாலைக் கல்வியில் களப்பயணங்கள் மூலம் பெறும் கல்வி அனுபவங்களை மாதிரிகளின் ஊடாக நூலக மட்டத்திலேயே எற்படுத்த உழைத்தல்.
7. எமது பண்பாட்டு புலம் தொடர்பான மாற்றங்களையும் புதுமைகளையும் மாதிரிகளின் ஊடாக ஆவணப்படுத்தவும் வெளிப்படுத்தவும் பாடுபடுதல்.
8. பல்லூடகக் கல்வி அறிவின் முழுமையான அனுபவத்தினை மாணவர்களுக்கு வழங்குதல்.
மூலக்கூறுகள்முப்பரிமாண நூலகமானது ஒன்றுக்கொன்று தொடர்புடைய படிநிலைத்தன்மை வாய்ந்த மூன்று கூறுகளைக் கொண்டது. முதலாவது கூறானது குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்த உருக்களுடன்(objects) தொடர்புடையது. இரண்டாவது கூறானது உருக்கள் சார்ந்து நூலகத்தில் காணப்படக்கூடிய தகவல் சாதனங்களுடன் தொடர்புடையது. மூன்றாவது கூறானது உருக்கள் மற்றும் ஆவணங்கள் சார்ந்த தகவலுடன் தொடர்புடையது.
உருவும் அதன் பொருளும் (1வது பரிமாணம்)குறிப்பிட்ட பொருள் சார்ந்து உருவாக்கப்பட்ட அல்லது உருவாக்கப்படுகின்ற உருக்கள் அனைத்தும் இங்கு கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இவ் உருக்கள் உண்மை உருக்களாகவோ அல்லது மாதிரிகளாகவோ இருக்கலாம். வாசகனின் ஆர்வத்தைத் தூண்டும் சக்தி கலைப்பொருட்களுக்கு அதிகம் இருப்பதன் காரணமாக அரும் பொருட்களை கூடியவரையில் சேகரித்து உருக்கள் என்ற நிலயில் பயன்படுத்துவது பயன்தரக்கூடியது. எடுத்துக்காட்டாக சிற்பக் கலை என்ற பொருட்துறையை எடுத்துக் கொண்டால் ஆதிகால கற்சிற்பத்திலிருந்து இன்றை வரைக்கும் சிற்பக்கலைக்குப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் சார்ந்து உருக்களை காட்சிப்படுத்தலாம்.  அதுமட்டுமன்றி  வார்ப்புச் சிற்பங்கள், செதுக்குச் சிற்பங்கள் இரண்டும் இணைந்து உருவான சிற்பங்கள் என சிற்பக்கலைக்கு பிரயோகிக்கப்படும் முறைகளின் அடிப்படையில் இவற்றை வகைப்படுத்திக் காட்சிப்படுத்தலாம். முப்பரிமாண நூலகத்தின் முதலாவது பரிமாணமாக உள்ள இந்த உருக்கள் முதல்நிலைத் தகவலாக சுவை ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐந்து புலன்கள் வழி வாசகனை வந்தடைகின்றன.
உருநிலைக் காட்சிப்படுத்தலானது சமூக சமநிலையாக்கம் என்ற இன்னொரு பண்பையும் தன்னுள் பொதிந்து வைத்திருக்கிறது. பொதுசன நூலகங்களோ அல்லது பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் போன்ற கல்வி நிறுவன நூலகங்களோ இத்தகைய உருநிலைக் காட்சிப்படுத்தலின் போது அறிவுக்கு மட்டுமன்றி திறனுக்கும் வாய்ப்பு வழங்குவதன் காரணமாக சமூகத்தில் படித்தவன், படிக்காதவன் என்ற பேதங்களுக்குமப்பால் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களது திறன்வழி உருவான வளங்களுக்கும் இடம் கொடுப்பதன் காரணமாக தகவலைத் தாங்கி நிற்கும் மனித வளங்களின் கணிசமான ஒத்துழைப்பு இந்த உருநிலைக் காட்சிப்படுத்தலினூடாக நூலகங்களை வந்தடைகின்றது. கிராமத்திலுள்ள விவசாயி முதற்கொண்டு மரவேலை, இரும்பு வேலை என்று பலதரப்பட்ட வேலைகளைச் செய்யும் அனைத்து உறுப்பினர்களது பங்களிப்பு இந்த உருநிலைக் காட்சிப்படுத்தலுக்கு தேவைப்படுவதன் காரணமாக வாசக சமூகத்தின் உருவாக்கம் பலதரப்பட்ட நிலைகளிலும் இருப்பது இதன் சிறப்பம்சமாகும். 
நூலும் அதன் வடிவங்களும் (2வது பரிமாணம்)முப்பரிமாண நூலகத்தின் இரண்டாவது பரிமாணமாக உருக்கள் சார்ந்து வெளியிடப்படும் நூல்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. தகவலைப் பொதிந்து வைத்திருக்கும் எழுத்து வடிவிலுள்ள அனைத்து வளங்களும் இங்கு கருத்தில் கொள்ளப்படுகின்றன. இவை நூல்கள், பருவ இதழ் கட்டுரைகள், சிறு நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் என நூலுருவிலோ அல்லது ஒலி ஒளி நாடாக்கள், நுண் வடிவங்கள், இணையத்தளங்கள் என நூலுருவற்ற வடிவிலோ இருக்கலாம். இவை அனைத்தும் இரண்டாம் நிலைத் தகவலாக வாசகனை வந்தடைகின்றன. நூலக இறாக்கைகளில் ஒளிந்திருக்கும் நூல்கள், முறிந்த ஒழுங்கு என்ற உத்தியின் அடிப்படையில் வாசகனுக்குப் புரியாது பலதரப்பட்ட இடங்களில் சிதறிக்கிடக்கும் நூல்கள் ஓரிடத்தில் காட்சிப்படுத்தப்படுவதானது வாசகனின் இலகுவான பாவனைக்கு உதவுகின்றது.
சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான இடத்தை வழங்குவதாக உரு நிலைக் காட்சிப்படுத்தல் இருக்க அந்த உறுப்பினர்களில் அறிவுசார் ரீதியில் தனது பங்களிப்பை வழங்கும் எழுத்தாளனுக்கு மட்டும் இந்த இரண்டாம் நிலைத் தகவலுக்கு பங்களிக்கும் வாய்ப்பு இருப்பது இதன் சிறப்பம்சமாகக் கருதத்தக்கது.
தகவலும் அதன் தரங்களும் (3வது பரிமாணம்)முப்பரிமாண நூலகத்தின் மூன்றாவது பரிமாணமாகக் கருதத்தக்கது தகவல் உருவாக்கமாகும். உருக்களிலிருந்து நேரடியாக உருவாக்கப்படுவதாகவோ அல்லது இரண்டாம் நிலைத் தகவலாக நூல்களிலிருந்து அதன் முக்கிய அம்சங்களை சாரமாக பிரித்தெடுப்பதாகவோ இது இருக்கும். ஆய்வுகூடங்களிலுள்ள செய்முறைகள் எளிமைப்படுத்தப்பட்ட வடிவில் இங்கு காட்சிப்படுத்தப்படலாம். மனித வளங்களுடன் மேற்கொள்ளப்படும் நோர்காணல் மூலமாகப் பெறப்படும் தகவல்கள் இங்கு காட்சிப்படுத்தப்படலாம். பலதரப்பட்ட நூல்களிலிருந்து தேடித் தொகுப்பாகவும் இவை இருக்கலாம். அதுவுமன்றி குறிப்பிட்ட பொருட்துறை சார்ந்து ஒருவரியால் மேற்கொள்ப்படும் ஆய்வு முடிவுகளின் எளிமைப்படுத்தப்பட்ட வடிவமாகவும் இவை இருக்கலாம். இந்த மூன்றாம் நிலைத் தகவல் உருவாக்கத்திற்கு பொறுப்பானவர்களாக நூலகர்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அறிவுப் பிரபஞ்சத்தில் ஏற்கனவே உருவாகிய, இன்றும் உருவாகிக்கொண்டிருக்கின்ற பொருட்துறைகளுககு உரிய இடத்தை தீர்மானிக்கும் பெரும்பணி நூலகர்களிடமே ஒப்படைக்கப்பட்டிருப்பதும், நூலகத்தை நாடும் அனைத்துத் துறை சார்ந்த வாசகனது தகவல் தேவையை பு}ர்த்தி செய்ய வேண்டிய கடப்பாட்டுக்கான அறிவுத் தேடலை மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதும் மூன்றாம்நிலைத் தகவல் உருவாக்கத்தில் நூலகர்களுக்கான பொறுப்பை அதிகப்படுத்தியிருக்கிறது என்றே கூறவேண்டும்.
உருவாக்கமும் அதன் படிநிலைகளும்
1  எந்தவொரு நூலகமும் இத்தகைய ஒரு காட்சிப்படுத்தலை பின்பற்றமுடியும்.  
2  நூலகத்தின் வாசகரது கவனத்தை ஈர்க்கக்கூடிய ஒரு சிறு இடம் இத்தகைய காட்சிப்படுத்தலுக்குப் போதுமானது. அது உசாத்துணைப் பகுதியின் ஒரு மூலையாகவோ அல்லது மையப்பகுதியாகவோ இருக்கலாம். வகுப்பறையின் ஒரு மூலை கூட வாசிப்பு மூலையாக மாறி இந்த எண்ணக்கருவிற்கு முழுமை கொடுப்பது மிகப்பயன்தரத் தக்கது.
3  வாரம் ஒரு பொருட்துறை என்ற வகையில் பாடத்திட்டத்துடன் இணைந்தவகையில் இக்காட்சிப்படுத்தலை மேற்கொள்ளமுடியும்.
4 எல்லாப் பொருட்துறைகளுக்கும் உருக்கள் இருக்க முடியாது. அதே போன்று அருகி வரும் பொருட்களைத் தேடும் பணியும் சிரமமானது. உருக்கள் இல்லாத சமயங்களில்  வாசகனின் கவனத்தை பெரிதும் ஈர்ப்பதில் உருக்களுக்கு அடுத்தபடியாக உருக்கள் தொடர்பான படங்கள் செல்வாக்குச் செலுத்தும் என்பதைக் கவனத்தில் கொண்டு படங்களை வைக்கலாம். இலக்கியம் மெய்யியல் போன்ற மனிதப்பண்பியல் துறைகளில் உருக்களுக்கு வாய்ப்புகள் குறைவு. இந்நிலையில் படங்களின் பங்களிப்பு பெரிதும் உதவும். எடுத்துக்காட்டாக கவிதை என்ற பொருட்துறையை முப்பரிமாண நூலகம் ஒன்றுக்கு தெரிவு செய்யும் போது அங்கு உருக்களுக்கு வாய்ப்பிருக்காது. எனினும் உலகப் புகழ் பெற்ற கவிஞர்களது உருக்களை சேகரிக்க முடியுமா என்பதை கவனத்தில் கொள்வதும் அது இல்லாத போது அவர்களின் படங்களை காட்சிப்படுத்துவதும் பயன்தரக்கூடியது.
5 ஒவ்வொரு நூலகமும் உருக்களை சேமித்து வைப்பதற்கு சேமிப்பகம் ஒன்றை உருவாக்குதல் அவசியமானது. இதற்கு ஒரு கண்ணாடி அலுமாரி போதுமானது. நூலகத்தின் மையப்பகுதியில் பாதுகாப்பான வகையில் கலைக்கூடம் போன்றும் இவ்வுருக்கள் பாதுகாக்கப்படலாம். தேவைப்படும் போது இவற்றில் பொருத்தமானவை முப்பரிமாண நூலகத்தின் உருநிலைக்காட்சிப்படுத்தலுக்கு பயன்படுத்தப்படும்.
இன்றைய தேவை எம்முன் காலக்கடமையாய் விரியும் பாரிய இப்பணிக்காக பாடசாலைச் சமூகம் தரக்கூடிய  முதன்மையான பங்களிப்பு உணர்வுபூர்வமான ஒத்துழைப்பேயாகும். நம்பிக்கையுடன் நாம் முன்னெடுக்கும் இப்பணியில் இணைய நீங்கள் செய்ய வேண்டியது...
• துறைசார் புலமையாளர்களாயின் காத்திரமான ஆலோசனைகளையும் கருத்தாடல்களையும் வழங்குதல்;.
• மாணவர்களாயின் பயன்பாட்டின் பெறுமதியை உணர்த்தும் வகையில் அமைந்த உங்கள் தேவை அதன் நிரம்பல் குறித்து எமக்குத் தெரியப்படுத்துதல்.
• சமூக விஞ்ஞானிகளாயின் ஆவணப்படுத்தப்படவேண்டிய உருநிலைச் சேகரிப்புக்களை வழங்குதல்;.
• ஆர்வலர்களாயின் உருநிலைச் சேகரிப்புக்களை சேகரிககும் பாரிய பணியில்  தோள்கொடுத்தல்;.
• பொதுமக்களாயின் வீட்டில் பயன்பாடற்றுக் கிடக்கும் பாரம்பரியக் கலைப் பொக்கிசங்களை பாடசாலை நூலகங்களுக்கு நம்பிக்கையுடன் வழங்குவதன்மூலம் சேகரிப்புக்களை முழுமைப்படுத்த உதவுதல்.
மானுடத்தை நேசிக்கும் அனைத்து மனங்களின் ஒன்றிணைந்த சக்தியே இச் செயற்திட்டத்தின் வெற்றி. ஒட்டுமொத்த சமூகப்பங்களிப்பையும் ஒத்துழைப்பினையும் முழுமையாக நம்பி அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆளணியினரின் செயற்பாடுகள் யாவும் சமூக மேம்பாட்டை மாத்திரமே மையங்கொண்டு சுழல்கின்றன.